×

1 இராஜாக்கள் : 10

  • 1 : கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
  • 2 : மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
  • 3 : அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
  • 4 : சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும் அவன் கட்டின அரமனையையும்,
  • 5 : அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
  • 6 : ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
  • 7 : நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
  • 8 : உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
  • 9 : உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
  • 10 : அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்த வர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
  • 11 : ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
  • 12 : அந்த வாசனை மரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.
  • 13 : ராஜாவாகிய சாலொமோன்தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
  • 14 : சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல்,
  • 15 : ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
  • 16 : சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன் சென்றது.
  • 17 : அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடக்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
  • 18 : ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பொன் தகட்டால் மூடினான்.
  • 19 : அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது, சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.
  • 20 : ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
  • 21 : ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுக்களெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
  • 22 : ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
  • 23 : பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
  • 24 : சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
  • 25 : வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
  • 26 : சாலொமோன் இரதங்களையும், குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
  • 27 : எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுரு மரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
  • 28 : சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
  • 29 : எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.